பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட பிறகு திருமணத்துக்கு மறுத்த நர்சுக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட பிறகு திருமணத்துக்கு மறுத்த நர்சை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தார்கள்.
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள எரகனஹள்ளியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி ரத்தினம்மாள் (வயது 25). கோவையில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கிக்கொண்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
இதற்கிடையே ரத்தினம்மாளுக்கும், தாளவாடி அருகே உள்ள அருள்வாடியை சேர்ந்த சித்தையா மகன் தேவராஜ் (29) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்தநிலையில் தன்னுடன் படித்த வாலிபர் ஒருவருடன் ரத்தினம்மாள் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அறிந்த தேவராஜ் சந்தேகப்பட்டு, ரத்தினம்மாளை செல்போனில் தொடர்புகொண்டு நீ யாரிடமும் பேசக்கூடாது என்று திட்டியுள்ளார்.
இதனால் ரத்தினம்மாள் தன்னுடைய பெற்றோரிடம் சென்று, என்னை தேவராஜ் சந்தேகப்படுகிறார். அதனால் நான் அவரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று கூறினார். இந்த தகவலை ராமன் தேவராஜனிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தேவராஜ் அருள்வாடியில் இருந்து எரகனஹள்ளியில் உள்ள ராமன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். தூங்கிக்கொண்டு இருந்த ராமன் கதவை திறந்துகொண்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது தேவராஜ் உங்கள் மகளிடம் நான் பேசவேண்டும் என்று சொல்லியுள்ளார். அதற்கு ராமன் முடியாது. இந்நேரம் வந்து பேசுகிறேன் என்கிறாயே இது நியாயமா? என்று தடடிக்கேட்டுள்ளார். சத்தம் கேட்டு ரத்தினம்மாளும் வெளியே வந்தார். அவரை பார்த்த தேவராஜ் நிச்சயிக்கப்பட்ட பிறகு என்னை ஏன் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறாய்? நீ என்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய கூடாது என்று மிரட்டியுள்ளார்.
அதற்கு ரத்தினம்மாள் இப்போதே நீ என்னை சந்தேகப்படுகிறாய். அதனால் உன்னை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றார். இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்தினம்மாளின் முதுகில் குத்தினார். இதில் காயம் ஏற்பட்டு ரத்த வழிந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே தேவராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார்.
அதன்பின்னர் ராமன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மகளை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு ரத்தினம்மாளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தார்கள்.