பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறி வாலிபரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ காட்சியால் பரபரப்பு போலீசார் விசாரணை


பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறி வாலிபரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ காட்சியால் பரபரப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 April 2019 3:45 AM IST (Updated: 28 April 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறி திருச்சியில் வாலிபரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் பாலியல் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் இதுபோன்ற ஒரு வீடியோ வாட்ஸ்அப்களில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த இந்த வாலிபரால் 100 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை சரிதானே என்கிற தலைப்பில் வீடியோ உலா வந்து கொண்டு இருந்தது.

மேலும், வீடியோவில் தோன்றும் வாலிபரின் கை, கால்களை கட்டி முகம் மற்றும் கால்களில் தாக்கி இருந்ததில் ரத்த காயங்கள் இருந்தன. காயத்துடன் கிடக்கும் வாலிபரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியும், பெண் பிள்ளைகளை நாசம் செய்வியா? என கேட்ட ஆடியோவும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ குறித்து திருச்சி மாநகர போலீஸ் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதன்அடிப்படையில் பாலக்கரை போலீசார் நேற்று அதிகாலை பீமநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வீடியோ காட்சியில் உள்ள அந்த வாலிபர் மாத்தூரை சேர்ந்த ஒரு வாலிபர் என்பதும், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கரை பீமநகர் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தபோது, இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது. அதன்பிறகு அவர் திருச்சியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பாலக்கரை போலீசார் அந்த வாலிபரை போனில் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வரும்படி கூறினர். இதேபோல் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பந்தப்பட்ட பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் விசாரணைக்கு அழைத்து உள்ளனர். இரு தரப்பினரும் விசாரணைக்கு வருவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபின்னரே வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் உண்மையானதா என்பது உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story