இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஊட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை


இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஊட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 27 April 2019 11:00 PM GMT (Updated: 27 April 2019 6:48 PM GMT)

இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதின் எதிரொலியாக ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினர்.

ஊட்டி,

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஓட்டல்களில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் ராமேசுவரம் பகுதிக்கு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் ராமேசுவரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் போலீசார் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த ஒருவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுவரம் வந்த தீவிரவாதிகள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் ஊட்டியில் கோடை சீசன் நடந்து வருவதால் தினமும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சங்கு, தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில் கியூ பிரிவு போலீசார் 100–க்கும் மேற்பட்டோர் ஊட்டி நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்கள் மற்றும் தனியார் காட்டேஜ்களில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் விடிய, விடிய சோதனை நடத்தினர்.

அப்போது விடுதிகளில் தங்கி உள்ள சுற்றுலா பயணிகளின் விவரங்கள் உரிமையாளர்களிடம் உள்ளதா?, அடையாள அட்டைகள் பெறப்பட்டு இருக்கிறதா?, சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கி இருக்கிறார்களா?, தனி நபர் அறை எடுத்து தங்கி உள்ளாரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விடுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகள் பதிவாகிறதா? என்றும் பார்த்தனர். ஊட்டி அருகே எல்லநள்ளி, லவ்டேல் சந்திப்பு, சேரிங்கிராஸ், பிங்கர்போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story