பில்லூர் மட்டம்– யானைப்பள்ளம் இடையே கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணி ஆதிவாசி மக்கள் அவதி
பில்லூர் மட்டம்– யானைப்பள்ளம் இடையே தார்ச்சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குன்னூர்,
குன்னூரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் யானைப்பள்ளம் ஆதிவாசி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியை சுற்றி சடையன் கொம்பை, சின்னாளகொம்பை ஆகிய ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. மேற்கண்ட ஆதிவாசி கிராமங்கள் உலிக்கல் பேரூராட்சியின் 14–வது வார்டிற்குட்பட்டது ஆகும். இந்த கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களுக்காக 6 கிலோ மீட்டர் நடை பயணமாக பில்லூர் மட்டம் வரவேண்டியது உள்ளது.
ஆனால் அந்த ஆதிவாசி கிராமங்களுக்கு செல்லும் மண்சாலை கரடு, முரடாக இருப்பதால் பெரும்பாலான வாகனங்கள் செல்வது இல்லை. இதனால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
யானைப்பள்ளம், சடையன் கொம்பை, சின்னாளகொம்பை ஆகிய பகுதிகளில் கடந்த 19–ந் தேதி இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணியளவில் சின்னாளகொம்பை கிராமத்தில் மின்னல் தாக்கியதால் சிறுவன் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். மழை பெய்ததால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தவர்கள் மறுநாள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் உலிக்கல் பேரூராட்சி சார்பில் பில்லூர் மட்டத்திலிருந்து யானைப்பள்ளத்திற்கு தார்ச்சாலை அமைக்க முதல் கட்டமாக 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே யானைப்பள்ளம், சடையன்கொம்பை, சின்னாளகொம்பை ஆதிவாசி கிராமங்களுக்கு செல்லும் அந்த மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றும் பணியை மீண்டும் தொடங்கி முடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.