விடுதிக்கான உதவி தொகையை நிறுத்தியதற்கு எதிர்ப்பு: அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் தொடர் போராட்டம் இரவிலும் நீடித்ததால் பரபரப்பு


விடுதிக்கான உதவி தொகையை நிறுத்தியதற்கு எதிர்ப்பு: அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் தொடர் போராட்டம் இரவிலும் நீடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

விடுதி கட்டணத்திற்கான உதவி தொகையை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 11 மணியை கடந்தும் இவர்களது போராட்டம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

கடலூர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள தாமரை விடுதியில் 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தங்கி படிப்பதற்காக எஸ்.சி.,எஸ்.டி., மாணவிகள் ரூ.45 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இதில் பல்கலைக்கழக உதவித்தொகை மூலம் ரூ.22 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. மீதமுள்ள தொகையை மாணவிகள் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் மாணவிகளுக்கு பல்கலைக்கழகம் மூலமாக வரும் உதவித்தொகை ரூ.22 ஆயிரம் வரவில்லை.

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், ரூ.22 ஆயிரத்தை மாணவிகளே கட்ட வேண்டும் இல்லையென்றால் வருகிற திங்கட்கிழமை அன்று நடைபெறும் செமஸ்டர் தேர்வு எழுத நுழைவு சீட்டு வராது என்று அறிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கட்டணம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு விடுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், தாமரை விடுதி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று பூமாகோவில் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பதிவாளர் ரவிச்சந்திரன் மாணவிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் மாணவிகள் அனைவரும் உடனடியாக விடுதிக்கு செல்ல வேண்டும், கட்டணத்தை கட்ட வேண்டும், இல்லையென்றால் அனைவரும் தேர்வு எழுத முடியாது என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது போராட்டம் நேற்று இரவிலும் நீடித்தது. இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகம் முன்பு மாணவிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

இதன் காரணமாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 11.30 மணியை கடந்தும் இவர்களது போராட்டம் நீடித்ததால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story