புயல் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் கடலோர காவல்படை, தீயணைப்பு வீரர்கள் முன்னெற்பாடு பணிகள் தீவிரம்


புயல் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் கடலோர காவல்படை, தீயணைப்பு வீரர்கள் முன்னெற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 28 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சேதத்தை தடுக்க முன்னேற்பாடாக கடலோர காவல்படை, தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் புயலை சமாளிக்க முன்னெற்பாடு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

கடலூர்,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது சென்னையில் இருந்து 1,180 கிலோ மீட்டர் தூரத்தில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரையோரம் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுடன் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் புயல் சேதத்தை தடுக்கும் வகையில் முன்னெற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி கடலூர் மாவட்ட கடலோர காவல் படையினர் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் பொதுமக்களை பாதுகாக்க தேவையான ரப்பர் படகுகள், மிதவை எந்திரம், கயிறு, பாதுகாப்பு கவச உடை போன்ற உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் கடலோர காவல்படையினர், 39 ஊர்க்காவல் படையினர் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள 44 கடற்கரையோர மீனவ கிராமங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவ கிராம தலைவர்களுக்கு செல்போன் மூலமாகவும், வாட்ஸ்–அப் மூலமாகவும் தகவல் தெரிவித்து, மீனவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, நெய்வேலி உள்பட 15 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதிப்பு ஏற்பட்டால், உட னடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட தேவையான கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இது தவிர தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை அளிக்காமல், பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் வீரர்கள் எந்நேரம் அழைத்தாலும் செல்வதற்கு வசதியாக தீயணைப்பு நிலையங்களில் தயாராக உள்ளனர்.


Next Story