பெரம்பலூரில் நீச்சல் பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம்


பெரம்பலூரில் நீச்சல் பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 28 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் நீச்சல் கற்றுகொள்ளும் பயிற்சிக்கு பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் 12 நாட்களில் நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ந் தேதி தொடங்கிய முதற்கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயிற்சி வகுப்பு தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறுகிறது.

நீச்சல் பயிற்சி

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கும் மாணவ- மாணவிகள் நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் நீச்சல் குளத்திற்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு நீச்சல் பயிற்றுனர் முறையாக நீச்சல் பயிற்சியை அளித்து வருகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் நீச்சல் கற்று வருகின்றனர். முதற்கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது. 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற மே மாதம் 1-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரையிலும், 3-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 15-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும், 4-ம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரையிலும், 5-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஜூன் 15-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுக்கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பிரதி திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக நீச்சல் குளத்திற்கு விடுமுறை விடப் படுகிறது. 

Next Story