புயல் முன் எச்சரிக்கையாக வடகாடு பகுதியில் குடிசைகளை தார்ப்பாயால் மூடிய விவசாயிகள்


புயல் முன் எச்சரிக்கையாக வடகாடு பகுதியில் குடிசைகளை தார்ப்பாயால் மூடிய விவசாயிகள்
x
தினத்தந்தி 27 April 2019 10:30 PM GMT (Updated: 27 April 2019 7:47 PM GMT)

புயல் முன் எச்சரிக்கையாக வடகாடு பகுதியில் குடிசைகளை பாதுகாக்க தார்ப்பாயால் விவசாயிகள் மூடினர்.

கீரமங்கலம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் மேற்கண்ட மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

வீடுகளை இழந்த மக்கள் இன்று வரை குடிசைகள் அமைக்க முடியாமல் தார்ப்பாய் களையும், தென்னை மட்டைகளையும் வீடுகளின் மேல் போட்டு வெயிலை சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் புயல் என்ற அறிவிப்பு வெளியானதால் மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க தயாராகி வருகிறார்கள்.

தார்ப்பாய்கள்

இந்த புயல் தமிழகத்தில் மரக்காணம் முதல் மணமேல்குடிக்கு இடைப்பட்ட கரை பகுதியை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சத்துடன் இருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த புயலால் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது என்று வானிலை தகவல்கள் கொடுக்கப்பட்டாலும் புயல் திடீரென வந்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி முன் எச்சரிக்கையாக வடகாடு பகுதியில் விவசாயிகள் தங்கள் குடிசைகளில் தார்ப்பாய்கள் போட்டு மூடி கட்டி வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கஜா புயலில் கவனக்குறைவாக இருந்ததால் குடிசைகளை புயல் காற்று கிழித்து கொண்டு போனது. குழந்தைகளை கொட்டும் மழையிலும், காற்றிலும் வைத்துக் கொண்டு இருந்தோம். அதனால் தான் தற்போது புயல் என்று சொன்னதுமே முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.


Next Story