வேலித்தகராறில் தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


வேலித்தகராறில் தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 April 2019 11:00 PM GMT (Updated: 27 April 2019 7:52 PM GMT)

வேலித்தகராறில் கூலித்தொழிலாளியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பூதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 40). அவர் திருவள்ளூர் மாவட்டம் மணலி வல்லூர் வி.ஆர்.பி. நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மணலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் வேலை செய்து வருகிறார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த அவரது மைத்துனர் ரஞ்சித் (22) என்பவரும் தங்கி அந்த தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள மீஞ்சூர் பட்டமந்திரி அண்ணாநகரை சேர்ந்த வினோத் என்கிற குடியரசு (27) என்பவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை சிலர் அகற்றியதாக தெரிகிறது. இதை ரஞ்சித் தான் அகற்றினார் என்று எண்ணிய வினோத் அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் கடந்த 9-6-2017 அன்று சம்பத், ரஞ்சித்குமார் ஆகியோர் வழக்கம் போல வேலையை முடித்துக்கொண்டு தங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பட்டமந்திரி அண்ணாநகர் அரசு பள்ளி மைதானம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த வினோத் மீண்டும் ஏன் முள்வேலியை அகற்றினாய் என்று கூறி ரஞ்சித்திடம் தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த வினோத், ரஞ்சித்தை தகாத வார்த்தையால் பேசி உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை சம்பத் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் ரஞ்சித் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து சம்பத் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வினோத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக வி.ஆர்.ராம்குமார் வாதாடினார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செல்வநாதன் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து வினோத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வினோத்தை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story