குளித்தலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அளவிடும் பணி


குளித்தலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அளவிடும் பணி
x
தினத்தந்தி 27 April 2019 10:45 PM GMT (Updated: 27 April 2019 7:53 PM GMT)

குளித்தலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அளவிடும் பணி தொடங்கியது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வேகேட் உள்ளது. கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக குளித்தலை வழியாக தினசரி பல பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. ரெயில்கள் வரும் நேரங்களில் குளித்தலை மணப்பாறை சாலையில் உள்ள இந்த ரெயில்வேகேட் மூடப்படுவது வழக்கம். தினந்தோறும் ரெயில்கள் வரும்போது பலமுறை இந்த ரெயில்வேகேட் மூடப்பட்டு ரெயில்கள் சென்றவுடன் மீண்டும் திறக்கப்படும். ரெயில்வேகேட் மூடப்படும்போது இந்த கேட்டின் இருபுறம் உள்ள சாலையில் வாகனங்கள் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். அதனால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். எனவே இங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டுமென்பது இப்பகுதி மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்து வருகிறது.

கணக்கெடுப்பு பணி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க சாலையின் நீள, அகலம் குறித்து ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கென நியமிக்கப்பட்டவர்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் கனரக வாகனம், லாரி, பஸ், கார், வேன், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

அறிக்கை தயார் செய்ய...

மேலும் குளித்தலை ரெயில்வே கேட்டின் மையப்பகுதியில் இருந்து பாலம் தொடங்கி, முடிவடையக்கூடிய பாலத்தின் மொத்த நீளம், பாலம் அமைக்கவேண்டிய உயரம், அகலம் குறித்து அளவிடப்படுகிறது. பாலம் அமைக்கப்படவுள்ள பகுதியில் பாலத்தின் கீழ் இருபுறமும் இணைப்பு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்கத் தேவையான இடத்தின் அளவு, இதற்காக எவ்வளவு நிலம் மற்றும் இடப்பகுதியை ஆர்ஜிதம் செய்யவேண்டும் என்பது குறித்தும் சர்வே செய்யப்படுகிறது. இனி வரும் சுமார் 20 ஆண்டுகளில் எவ்வாறு வாகன போக்குவரத்து இப்பகுதியில் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும், பாலம் அமையவுள்ள பகுதியின் தரை வரைபடம் உள்ளிட்டவைகள் அடங்கிய முழு திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருவதாக சர்வே பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன அலுவலர் தெரிவித்தார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

குளித்தலை பகுதி மக்களின் நீண்ட வருட கனவாக உள்ள இந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்க கணக்கெடுப்பு பணி நடைபெறுவதை அறிந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பணி விரைவில் தொடங்கப்பட்டு பாலம் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story