பானி புயலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 936 பேர் மீட்பு பணிக்கு தயாராக உள்ளனர் கலெக்டர் தகவல்


பானி புயலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 936 பேர் மீட்பு பணிக்கு தயாராக உள்ளனர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 April 2019 4:30 AM IST (Updated: 28 April 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பானி புயலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 936 பேர் மீட்பு பணிக்கு தயாராக உள்ளனர் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்து கூறியதாவது:-

பானி புயலையொட்டி மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, பொதுப்பணிதுறை, மின்சாரவாரியம், வேளாண்துறை போன்ற அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

புயல் பாதிக்கும் இடங்களை கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு தற்காலிக முகாம்களை அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

அங்கு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, கழிவறைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மாவட்டத்தில் 64 மண்டல குழுக்கள் தயார் செய்து களத்தில் பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

936 ஆண் மற்றும் பெண் முதல்நிலை பொறுப்பாளர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை மூலம் மணல் மூட்டைகள் பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் ரத்னா மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story