கோர்ட்டு உத்தரவுப்படி ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கவேண்டும்; ஓய்வுபெற்ற ஊழியர்கள் வலியுறுத்தல்
கோர்ட்டு உத்தரவுப்படி ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க ஓய்வுபெற்ற ஊழியர்கள் வலியுறுத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவை ரோடியர் பஞ்சாலை ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்க தலைவர் சத்தியசீலன், பொதுச்செயலாளர் சின்னதுரை ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:–
ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு சட்டப்படி 30 நாட்களுக்குள் பணிக்கொடை வழங்கவேண்டும் என சட்டம் இருந்தும் பல ஆண்டுகளாக நிர்வாகம் பணிக்கொடை வழங்காததை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடைபெறும்போது பிரதிவாதியான புதுச்சேரி அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் அதில் ரூ.5 கோடியே 43 லட்சத்து 19 ஆயிரத்து 947 ஒதுக்கீடு செய்து 16 ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் வட்டி கொடுக்கப்படவும் மற்றும் 133 ஊழியர்களுக்கு மேல்முறையீட்டு அதிகாரியின் கட்டளைக்கு ஏற்ப வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் நீதிமன்றம் நியாயமான ஒரு கால அளவுக்குள் பணிக்கொடை வழங்க நிர்ணயம் செய்ய அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் ஆணைக்கு பதில் அளித்த புதுச்சேரி அரசின் கூடுதல் செயலாளர் பிரியதர்ஷினி, அனைத்து ஊழியர்கள், தொழிலாளர்களுக்கும் சேரவேண்டிய தொகைகளை ஆகஸ்டு 31–ந்தேதிக்குள் வழங்க பொதுசந்தையில் கடன்பெற்று அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுத்தபின் ஆலைகளின் நிலங்களை விற்று கடன் தொகையை ஈடுசெய்வது என்று கூறினார்.
புதுவை அரசின் பதிலுரையை நீதிமன்றம் ஏற்று புதுச்சேரி அரசாங்கத்திற்கும், ரோடியர் மில் நிர்வாகத்துக்கும் கடந்த மார்ச் மாதம் 25–ந்தேதி அனுமதிக்கப்பட்ட தொகையினை அந்த அரசாணையின்படி சொல்லப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுவை அரசும், ரோடியர் மில் நிர்வாகமுகம் வழங்கிய உறுதிமொழியின்படி அனைத்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் பணிக்கொடையை காலதாமதம் செய்யாமல் வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ஜூன் மாதம் 24–ந்தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுவை அரசும், மில் நிர்வாகமும் நீதிமன்றத்தில் உறுதி அளித்ததன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.