ஆலங்குளம் அருகே துணிகரம்: டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கத்தியை காட்டி ரூ.1.21 லட்சம் கொள்ளை 4 பேரை பிடித்து விசாரணை


ஆலங்குளம் அருகே துணிகரம்: டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கத்தியை காட்டி ரூ.1.21 லட்சம் கொள்ளை 4 பேரை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 28 April 2019 3:30 AM IST (Updated: 28 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.21 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதில் தென்காசி மேலகரத்தை சேர்ந்த மாரித்துரை என்பவர் மேற்பார்வையாளராகவும், நல்லூரை சேர்ந்த ராமர், மருதம்புத்தூரை சேர்ந்த முத்துக்குட்டி ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை அடைத்துவிட்டு ராமரும், முத்துக்குட்டியும் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். மாரித்துரை வசூலான பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக அதனை ஒரு பையில் வைத்து தனது மோட்டார்சைக்கிள் பெட்டிக்குள் போட்டு பூட்டினார். பின்னர் மேலகரம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் 3 பேர் ஒரே மோட்டார்சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்தனர். மாரித்துரை அடைக்கலப்பட்டணம் அருகே வந்தபோது, மர்மநபர்கள் அவரது மோட்டார்சைக்கிளை காலால் எட்டி மிதித்தனர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, மாரித்துரை மோட்டார்சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.1.21 லட்சத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அவரது மோட்டார்சைக்கிளையும் பறித்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து மாரித்துரை ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு மர்மநபர்கள் விட்டுச்சென்ற ஒரு கத்தியும், ஒரு செல்போனும் கிடைத்தது. அந்த செல்போன் மூலம் அதில் இருந்த எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது எதிர்முனையில் பேசியவர், இது தனது அண்ணனின் செல்போன் என்றும், ஊர் சிவகிரி என்றும் கூறினார். இதனை வைத்து போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் சாலையில் வழிப்பறி நடந்துள்ள சம்பவம், பொதுமக்கள், வியாபாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story