தொழில்நுட்ப கோளாறு: மதுரை–சென்னை விமானம் 6½ மணி நேரம் தாமதம்
உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமான சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 6 மணி நேரம் முடங்கியது.
மதுரை,
தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமான சேவை சுமார் 6 மணி நேரம் முடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகர விமான நிலையங்கள் மட்டுமின்றி மதுரை போன்ற விமான நிலையங்களிலும் ஏர் இந்தியா விமான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 1.30 மணிக்கு சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் நேற்றிரவு 8 மணிக்கு தான் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றது. சுமார் 6½ மணி நேரம் தாமதத்தின் காரணமாக, அந்த விமானத்தில் 44 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். மற்றவர்கள் கார் மற்றும் வேறு விமானங்கள் மூலம் சென்னை சென்றடைந்தனர். இதேபோல் சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 10 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நள்ளிரவு 12.30 மணி அளவில் வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.