அரூர் அருகே விபத்தில் மூதாட்டி காயம்: நஷ்டஈடு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
அரூர் அருகே விபத்தில் காயம் அடைந்த மூதாட்டிக்கு நஷ்டஈடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யப்பட்டது.
அரூர்,
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பொய்யப்பட்டியை சேர்ந்தவர் மணியக்காரன். இவருடைய, மனைவி சின்னக்கண்ணு (வயது 62). இவர், கடந்த 2010–ம் ஆண்டு ஊத்தங்கரையில் இருந்து, பொய்யப்பட்டிக்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார். அப்போது பொய்யப்பட்டி பஸ் நிறுத்தத்தில், பஸ்சில் இருந்து இறங்கும் போது, டிரைவர் பஸ்சை எடுத்துள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சின்னக்கண்ணு காயமடைந்தார்.
இதனிடையே விபத்து நஷ்டஈடு கோரி சின்னக்கண்ணு தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் காயமடைந்த மூதாட்டி சின்னக்கண்ணுவிற்கு நஷ்டஈடு தொகையாக ரூ.1.38 லட்சம் வழங்க கடந்த 2017–ம் ஆண்டு, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நஷ்டஈடு தொகையை வழங்காமல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது.
அரசு பஸ் ஜப்திஇந்தநிலையில், மனுதாரர் சார்பில், அரூர் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நஷ்டஈடு தொகைக்கு, வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 920 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், நஷ்டஈடு தொகை வழங்காமல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய, சார்பு நீதிபதி நந்தினி உத்தரவிட்டார். இதையடுத்து, அரூர்–கோம்பை வழித்தடத்தில், சென்ற அரசு பஸ்சை, அரூர் பஸ் நிலையத்தில் வைத்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.