இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை


இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 28 April 2019 4:15 AM IST (Updated: 28 April 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

தர்மபுரி,

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்று தகவல் பரவியது. இதையடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஓடும் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ரெயில்வே போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் நேற்று ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கினார்கள்.

தீவிர விசாரணை

தர்மபுரி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி தலைமையில், ரெயில்வே போலீசார் தர்மபுரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் ரெயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் ரெயில்களில் வந்து இறங்கும் பயணிகள் கொண்டு வரும் பைகள், பொருட்களை தீவிர சோதனை நடத்தினார்கள். போலீஸ் மோப்பநாய் மூலம் ரெயில் நிலைய முன்பகுதி மற்றும் பிளாட்பாரங்கள், தண்டவாள பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி ரெயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்களில் ரெயில்வே போலீசார் சோதனையை தொடங்கி உள்ளனர்.

இதேபோல் மொரப்பூர், பொம்மிடி, பாலக்கோடு, தொப்பூர், சிவாடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடும் நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டம் முழுவதும் இரவு-பகல் என 24 மணி நேரமும் ரெயில் நிலையங்களில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும். ரெயில் பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தர்மபுரி ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.


Next Story