அந்தேரியில் போலீசார் என கூறி முதியவரிடம் ரூ.1¼ லட்சம் நகைகள் அபேஸ் 2 பேருக்கு வலைவீச்சு
அந்தேரியில் போலீசார் என கூறி முதியவரிடம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,
மும்பை அந்தேரியை சேர்ந்தவர் குந்தன் ஷா (வயது72). இவர் சம்பவத்தன்று வங்கிக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கி வந்த 2 பேர் தங்களை போலீஸ்காரர்கள் என கூறி அவரிடம் அறிமுகமாகினர்.
தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் இருப்பதாக கூறிய அவர்கள் அந்த பகுதியில் அடிக்கடி நகைப்பறிப்பு சம்பவம் நடப்பதால், அணிந்திருக்கும் நகைகளை கழற்றி பத்திரமாக வைத்து கொள்ளுமாறு தெரிவித்தனர்.
நகைகள் அபேஸ்
இதனை நம்பிய குந்தன் ஷா தான் அணிந்திருந்த ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி, மோதிரத்தை கழற்றி உள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் அந்த நகைகளை வாங்கி ஒரு காகிதத்தில் பொதிந்து கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்தநிலையில், குந்தன் ஷா வீட்டிற்கு வந்த பின்னர் காகிதத்தை பிரித்து பார்த்தார். அப்போது அதற்குள் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் என கூறிய ஆசாமிகள் இருவரும்தான் நகைகளை அபேஸ் செய்து சென்றிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் அந்தேரி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமிகள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story