கிருஷ்ணகிரி அணையில் 2 அடி உயர சிலை கண்டுபிடிப்பு


கிருஷ்ணகிரி அணையில் 2 அடி உயர சிலை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 29 April 2019 4:45 AM IST (Updated: 28 April 2019 11:04 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் 2 அடி உயர சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அணையின் நீர்தேக்கப்பகுதியின் மேற்கு பகுதியில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். இதில், தாளாப்பள்ளத்தூர் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பகுதியில் கரையில் இருந்து 500 மீட்டர் உட்புறம் சென்ற போது கவிழ்ந்த நிலையில் 2 அடி உயரமுள்ள ஒரு சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

இங்குள்ள சிலை நின்ற நிலையில் கால்கள் உடைந்த நிலையிலும் உள்ள ஒரு தேவி கற்சிற்பம். இச்சிலை 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதன் உயரம் 2 அடி ஆகும். இதன் தலை மற்றும் பாத பகுதிகள் உடைந்துள்ளன. வலது கை தொங்க விட்ட நிலையிலும் இடது கையில் பிடித்த நிலையிலும் உள்ளது. கையிலும் இடையிலும் கழுத்துப்பகுதியில் அணிகலன்கள் அணிந்து உள்ளவாறு உள்ளது.

அந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் முழுமையாக வடிவமைக்காத இரண்டாவது சிற்பம் இருந்தது. இது விநாயகர் அமர்ந்து உள்ளது போன்று ஒரு காலை பீடத்தில் ஊன்றியும், மற்றொரு காலை மடித்து முன்னாள் வைத்தும் அமர்ந்த நிலையில் ஒரு கையில் பூ வைத்து மற்றொரு கை வரம் கொடுக்கும் கையாகவும் செதுக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பை பார்க்கும் போது அய்யனாருக்கு இடப்புறத்தில் இருக்கும் புஷ்கலா தேவியின் உருவமாக இருக்கும் என தோன்றுகிறது. இதுவும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

அதற்கு அருகே 50-க்கும் மேற்பட்ட உரல்கள் காணப்பட்டன. ஒருகாலத்தில் நெல்லில் இருந்து அரிசியை உலக்கையால் குத்தித்தான் எடுத்தார்கள். தற்போது அனைத்துக்கும் எந்திரங்கள் வந்துவிட்டதால். அவை தேவையற்ற பொருட்கள் ஆகிவிட்டன. அதனால் அணையின் பின் பகுதியில் போடப்பட்டுள்ளது. ராகி, கோதுமை இவற்றை மாவாக அரைக்க 25 ஆண்டுகளுக்கு முன் நாம் பயன்படுத்திய ஆரியக்கல் எனப்படும் தானியம் அரைக்கும் அரவை கல்லும், கோவில் கொடிமரத்துக்கு முன் இருக்கும் பலிபீடக்கல்லும், கோவில் விளக்கு தூணின் மேற்பகுதியில் இருக்கும் வட்டக்கல்லும் அங்கிருந்து எடுத்து வரப்பட்டது.

இவையெல்லாம் பழைய கோவில்களை புதுப்பிக்கும் பொழுது பழுதடைந்த இவற்றை ஆறு குளம் போன்ற நீர்நிலைகளில் விட்டுவிடுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். இவ்வாறு கொண்டு வந்து அணை பகுதியில் விட்டுச் சென்ற பொருட்களே இவை. எனவே பொதுமக்கள் யாரேனும் பழைய கோவில்களை புதுப்பிக்கும்போது உடைந்த சிற்பங்கள் மற்றும் கட்டிட கற்கள் போன்றவற்றை அருங்காட்சியகத்திற்கு அளித்தால் அவற்றை இங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைத்து பாதுகாப்போம். அதேப்போல் பழைய வீடுகள் இடிக்கும் போது மரசிற்ப வேலைப்பாடுகள் உள்ள வாசல் கால்கள், உடைந்திருந்தாலும் அருங்காட்சியகத்துக்கு அளிக்கலாம். வீட்டில் பெரியவர்கள் சேர்த்து வைத்த போர்களில் பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் பழங்கால பொருட்களை தெரியாமல் எடைக்கு போடுவதாக தெரிகிறது. இவற்றையும் அருங்காட்சியகத்துக்கு அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story