தண்ணீர்– உணவு தேடி ஆசனூர் சாலையை அடிக்கடி கடக்கும் யானைகள் வாகனங்களை துரத்துகின்றன
தண்ணீர் மற்றும் உணவு தேடி ஆசனூர் சாலையை அடிக்கடி கடக்கும் யானைகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை துரத்துகின்றன.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், விளாமுண்டி, பவானிசாகர் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் மரங்கள் காய்ந்து விட்டன. செடி, கொடிகள் கருகிவிட்டன. மேலும் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள், தடுப்பணைகள் போன்ற நீர்நிலைகள் வற்றிவிட்டன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி இடம் பெயர்ந்து வருகின்றன. யானைகள் இடம் பெயரும் வழித்தடமாக தலமலை, ஆசனூர் வனப்பகுதி உள்ளது. இதனால் யானைகள் கூட்டம் கூட்டமாக ஆசனூர்–மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன. அவ்வாறு கடக்கும் யானைகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை துரத்துகின்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘யானைகள் சாலையை கடக்கும் போது வாகனத்தை நிறுத்தி அவைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது. மேலும் வேடிக்கையும் பார்க்கவும் கூடாது. அதுமட்டுமின்றி ஆசனூர்– மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம்,’ என தெரிவித்துள்ளனர்.