ஈரோட்டில் தொடரும் சம்பவம்: சிக்னலுக்காக நின்றிருந்த ரெயிலில் 2 பெண்களிடம் 17 பவுன் நகை பறிப்பு


ஈரோட்டில் தொடரும் சம்பவம்: சிக்னலுக்காக நின்றிருந்த ரெயிலில் 2 பெண்களிடம் 17 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 29 April 2019 3:30 AM IST (Updated: 29 April 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சிக்னலுக்காக நின்றிருந்த ரெயிலில் 2 பெண்களிடம் 17 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு,

ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம், செல்போன் போன்றவை திருடப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. ஈரோடு மார்க்கமாக வந்து செல்லும் ரெயில்களில் திருட்டு சம்பவம் ஏற்படுவதை தடுக்க ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் சிக்னலுக்கு நின்ற ரெயிலில் நகைப்பறிப்பு சம்பவம் ஏற்படுவது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை– எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 20–ந் தேதி ஈரோடு ரெயில் நிலையம் அருகில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த முகமது சாகிர்பாஷாவின் மனைவி காதர்பீவியிடம் மர்மநபர் 2 பவுன் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்று முன்தினம் அதிகாலையில் 2 பெண் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெருந்தலையூர் பொள்ளாச்சிப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி தேவிசீலானி (வயது 31). இவர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து திருப்பூர் செல்வதற்காக கொச்சிக்கோடா– மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். அந்த ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை ஈரோடு அருகே வந்தது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நுழைவதற்காக அந்த ரெயில் சிக்னலுக்காக நின்றிருந்தது.

மேலும், அங்கு இருட்டாக இருந்ததால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர் ஜன்னல் ஓரமாக படுத்திருந்த தேவிசீலானி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்தார். அவர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க டி–சர்ட்டு அணிந்த வாலிபர் தப்பி ஓடியது தெரியவந்தது. அந்த பகுதி இருட்டாக இருந்ததால் பயணிகளால் அந்த நபரை பிடிக்க முடியவில்லை.

அதே பெட்டியில் பயணம் செய்த கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் காடாபாடி பகுதியை சேர்ந்த சதீசின் மனைவி ராஜேஸ்வரி (38) என்பவரிடம் 7 பவுன் சங்கிலி, 3 பவுன் சங்கிலி என மொத்தம் 10 பவுன் சங்கிலிகளை மர்மநபர் பறித்து சென்றார்.

இதுகுறித்து தேவிசீலானி, ராஜேஸ்வரி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே ரெயில் பெட்டியில் இருந்த 2 பெண்களிடம் அடுத்தடுத்து நகை பறிக்கப்பட்டதால், ஒரே நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் சிக்னலுக்காக நின்ற ரெயிலில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்றும், அங்கு சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story