மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு நண்பர் படுகாயம்
மகேந்திரமங்கலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் தமிழ்செல்வன்(வயது24). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதேபகுதியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் பூபதி(24). கட்டிட மேஸ்திரி. நண்பர்களான தமிழ்செல்வனும், பூபதியும் ஓசூரில் இருந்து நேற்று முன்தினம் சிட்லகாரம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
மகேந்திரமங்கலம் உள்ள சூடப்பட்டி பகுதியில் வந்தபோது அங்குள்ள வளைவில் திரும்பினர். அப்போது சாலையோரம் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பூபதி படுகாயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூபதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story