சாலையில் ஓடும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்


சாலையில் ஓடும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 29 April 2019 3:45 AM IST (Updated: 29 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி–திண்டுக்கல் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி– திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு எதிரில் மழைநீர் வடிகால் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து சாலையின் மறுபுறம் வரை குழாய் அமைத்து மழைநீர் பாலாற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் வடிகால் தொட்டியில், இந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்லும் வகையில் இணைக்கப்பட்டது.

இதனால் கழிவுநீருடன் வரும் குப்பைகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்குவதால், தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியின்றி, சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:– இந்த பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் குடியிருப்புக்கள், ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுநீரை குழாய் மூலம் சாலை ஒரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் தொட்டியில் இணைத்துள்ளனர்.

இதனால் கழிவுநீர் குழாயில் வரும் குப்பைகள் பிளாஸ்டிக் பைகள், கோழி கடைகளின் கழிவுகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்கி அடைப்பு ஏற்படுகிறது. அப்போது இந்த தொட்டி நிரம்பி கழிவுநீர் சிங்கம்புணரி–திண்டுக்கல் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஒடுகிறது.

இதுபோன்று அடிக்கடி நிகழ்வதால், கடும் துர்நாற்றம் வீசிவருவதோடு, இந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும் பெரும் சிரமமடைகின்றனர். மேலும் மழைநீர் வடிகால் செல்லும் பாதையில் கழிவுநீர் செல்வதால், பாலாற்றில் மாசு ஏற்பட்டு வருகிறது.

இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்தும், மழைநீர் வடிகால் தொட்டியில் கழிவுநீர் செல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story