பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் நீதிபதி வடிவேலு பேச்சு


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் நீதிபதி வடிவேலு பேச்சு
x
தினத்தந்தி 29 April 2019 3:45 AM IST (Updated: 29 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சட்ட விழிப்பணர்வு முகாமில் நீதிபதி வடிவேலு கூறினார்.

சிவகங்கை,

காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கப்பட்டி மற்றும் மேலமருங்கூர் ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் அமைப்பு சாரா பணியாளர்களுக்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமில் கலந்து கொண்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் நீதிபதி வடிவேலு பேசியதாவது:– பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முதலில் பொதுமக்கள் தங்களது சட்ட உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

குற்றத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் இழப்பீடு பெறுவதற்கு உரிமை உள்ளது. அதற்காக மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் எவ்வித கட்டணமும் இன்றி உரிய உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் இல்லம் சாரா குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முத்து கூறுகையில், குழந்தை திருமணம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தல் ஆகிய குற்றங்கள் குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பெற்றோர்கள் தினமும் 1 மணி நேரமாவது தங்களுடைய குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை தெரிந்து கொண்டு, அவர்களை குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை சட்ட பணிகள் தன்னார்வலர் நாகேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் அழகம்மாள், மலைராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story