பண்ருட்டி அருகே, நாட்டு வெடிகள் வெடித்து தொழிலாளி பலி - கூரை வீடு இடிந்து தரைமட்டம்


பண்ருட்டி அருகே, நாட்டு வெடிகள் வெடித்து தொழிலாளி பலி - கூரை வீடு இடிந்து தரைமட்டம்
x
தினத்தந்தி 29 April 2019 4:00 AM IST (Updated: 29 April 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் கூரை வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தால் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் என்கிற பாஸ்கர் (வயது 50) தொழிலாளி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சாமி ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக நடுவீரப்பட்டு கிராமத்துக்கு சென்று 7 சரம் நாட்டு வெடிகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பால் காய்ச்சுவதற்காக பாஸ்கர் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது அதில் இருந்து பறந்த தீப்பொறி வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகளின் மீது விழுந்தது. இதில் பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்து சிதறின.

இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதனால் வீட்டுக்குள் இருந்த பாஸ்கர் வெளியே வரமுடியாமல் தவித்தார். அப்போது அவரது உடலிலும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் கூச்சலிட்டு அலறிய அவர், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வெடிகள் அடுத்தடுத்து வெடித்ததால் கூரை வீடும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. வெடி சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்து, கூரை வீட்டின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து இடிந்து தரைமட்டமான கூரை மீது எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் வெடிவிபத்தில் பலியாகி இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வெடிவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story