பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வியாபாரி கைது - நண்பரை சிக்க வைக்க திட்டமிட்டது அம்பலம்


பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வியாபாரி கைது - நண்பரை சிக்க வைக்க திட்டமிட்டது அம்பலம்
x
தினத்தந்தி 28 April 2019 11:00 PM GMT (Updated: 28 April 2019 7:36 PM GMT)

பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், நண்பரை சிக்க வைக்க திட்டமிட்டது அம்பலமானது.

பொள்ளாச்சி,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் இலங்கையை போன்று கோவையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இது குறித்து, சென்னை போலீசார் உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், பொள்ளாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், வெங்கட்ராமன், சப்- இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், ரெயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் வைக்கப்பட வில்லை என்பது தெரிய வந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பதிவான செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பொள்ளாச்சி-கோட்டூர் ரோடு விவேகானந்தர் வீதியை சேர்ந்த கடலை வியாபாரி ருக்மாங்கதன் (வயது 53) என தெரியவந்தது. அவரை நேற்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது நண்பரை சிக்க வைக்க குடிபோதையில் இச்செயலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

கைதான ருக்மாங்கதன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது வீட்டின் அருகே வசித்து வரும் கியாஸ் ஸ்டவை பழுது பார்க்கும் தொழிலாளியான சிவராஜ் (54) என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவேன். இது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை. சம்பவத்தன்று நானும், சிவராஜூம் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தோம். அப்போது சிவராஜ் எனது மனைவியை பற்றி அவதூறாக பேசினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் மதுபோதையில் இருந்ததால் சிவராஜை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன்.

எனவே சிவராஜை போலீசில் சிக்க வைக்க முடிவு செய்தேன். அதன்படி இலங்கையை சேர்ந்த சிவராஜ் உள்ளிட்ட 2 பேர் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எனது செல்போனில் பேசி தகவல் தெரிவித்தேன். அந்த எண்ணை வைத்து போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட ருக்மாங்கதன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story