துக்க வீட்டில் தகராறு: 3 பேருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது


துக்க வீட்டில் தகராறு: 3 பேருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2019 3:45 AM IST (Updated: 29 April 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே வாணாதிராஜபுரம் சாலை தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவருடைய சின்னதாத்தா மாரிமுத்து இறந்து விட்டார்.

இதனால் வாணாதிராஜபுரம் மெயின்ரோட்டில் துக்க வீட்டில் மேளம் வைத்துள்ளனர். அப்போது விஜயசந்திரன் மற்றும் சிலர் மேளம் அடித்தவர்களிடம் குறிப்பிட்ட சாதி குறித்து பெருமையாக பாடப்பட்ட திரைப்பட பாடலுக்கு வாசிக்கும்படி கூறினர்.

இதனை விஜய் மற்றும் அவரது உறவினர்கள் விக்னேஷ், பூமிநாதன், சுகன்யா, ராதா ஆகியோர் தடுத்து அந்த பாடலை துக்க வீட்டில் வாசிக்கக்கூடாது என கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விஜயசந்திரன் (30), மணிவண்ணன் (31), தமிழரசன் ஆகியோர், அரிவாளால் விஜய் (23), விக்னேஷ் (23), பூமிநாதன் (60) ஆகிய 3 பேரை சரமாரியாக வெட்டினர். சுகன்யா, ராதா ஆகியோரை தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த விஜய், விக்னேஷ், பூமிநாதன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் லேசான காயம் அடைந்த சுகன்யா, ராதா ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து விஜய் கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசந்திரன், மணிவண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோல் தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story