அவனியாபுரத்தில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை
மதுரை அவனியாபுரத்தில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை,
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி.காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற பிள்ளையார் சதீஷ்(வயது 28). கஞ்சா வியாபாரி. இவர் சம்பவத்தன்று மேல அனுப்பானடி பகுதியில் உள்ள கண்மாய் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சதீஷ்குமாரை வெட்டியது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று வெட்டியது. இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார், சதீஸ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரிக்கிறோம். இந்த கொலை சம்பவம் நடந்து ஒன்று அல்லது இரண்டு தினங்கள் இருக்கலாம். அழுகிய நிலையில் தான் பிணத்தை கைப்பற்றி இருக்கிறோம்‘ என்றனர்.