“தாய்மொழியில் வாதாடும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்” ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விமலா பேச்சு


“தாய்மொழியில் வாதாடும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்” ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விமலா பேச்சு
x
தினத்தந்தி 29 April 2019 4:15 AM IST (Updated: 29 April 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

தாய்மொழியில் வாதாடும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் என்று ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விமலா பேசினார்.

மதுரை,

அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பின் தென் தமிழக மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் வக்கீல் மனோகரன் வரவேற்றார். விழாவில் ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி விமலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் வக்கீல்கள் பலருக்கு நினைவுப்பரிசு வழங்கி அவர் பேசியதாவது:–

ஒரு இயக்கத்திற்கு தலைமை தாங்குவது என்பது கஷ்டமான காரியம். நம்முடைய வேலையில் உரிய மரியாதை என்பது முக்கியம். ஒரு வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால், அந்த வக்கீல் சிறப்பாக வாதாடியுள்ளார் என்று அர்த்தம். பொதுநல வழக்குகளில் தகுதியான தீர்ப்பு வருவதற்காக வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களுடன் பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்ற வழக்குகள் வெற்றி பெற புதுப்புது சட்டங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

மேலும் வக்கீல்கள் தங்கள் அறிவுத்திறனை கூடுதலாக வளர்த்துக்கொள்ள தொழில்நுட்ப நுணுக்கங்களை கற்றுக்கொள்ளவேண்டும். நீதிமன்றங்களில் தாய்மொழியில் வாதாடக்கூடிய உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாநாட்டில், தமிழக அரசு வக்கீல்கள் சேமநலநிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். வக்கீல்களுக்கு தனி வாரியம், கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை அமைக்க வேண்டும். இளம்வக்கீல்களுக்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நீதிமன்ற முத்திரைத்தாள் கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும். சுங்கச்சாவடியில் வக்கீல்களுக்கு இலவச அனுமதி வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், பாண்டுரங்கன், வக்கீல் சங்க நிர்வாகிகள் பாண்டியராஜன், கு.சாமித்துரை, தீபக், ராமசாமி, நெடுஞ்செழியன், ரெங்கராஜன், ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story