பைந்தூர் அருகே சென்றபோது நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ‘தீ’ பெண் பயணியின் தகவலால் பெரும் விபத்து தவிர்ப்பு


பைந்தூர் அருகே சென்றபோது நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ‘தீ’ பெண் பயணியின் தகவலால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 29 April 2019 3:00 AM IST (Updated: 29 April 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

பைந்தூர் அருகே சென்றபோது நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. பெண் பயணியின் தகவலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மங்களூரு,

டெல்லி நிஜாமுதீனில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நிஜாமுதீனில் இருந்து எர்ணாகுளம் நோக்கி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12618) சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று அதிகாலை உடுப்பி ரெயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலை 1.30 மணி அளவில் அந்த ரெயிலில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த பெண் ஒருவர், கழிவறை செல்வதற்காக எழுந்து வந்தார்.

அப்போது அந்த ரெயிலில் கழிவறை அருகே கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பைந்தூர் ரெயில் நிலையத்தின் முன்பாக சைனாபுரா-பீஜூர் கிராமங்களுக்கு இடையே அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் ரெயில்வே அதிகாரிகளுக்கும், குந்தாப்புரா தீயணைப்பு படையினருக்கும் டிக்கெட் பரிசோதகர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் ஏ.சி. பெட்டியில் பாதி படுக்கைகள் தீயில் எரிந்து நாசமானது.

நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் இருந்த பயணிகள் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஏ.சி. பெட்டியில் தீப்பிடித்து எரிவதை பார்த்து பெண் பயணி உடனடியாக தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட ஏ.சி. பெட்டி மாற்றப்பட்டு வேறு ஏ.சி.பெட்டி ரெயிலுடன் இணைக்கப்பட்டது.

அதன்பின்னர், நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இந்த தீ விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த ரெயிலில் ஏ.சி. பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story