தக்கலை அருகே முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


தக்கலை அருகே முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 29 April 2019 3:45 AM IST (Updated: 29 April 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி தங்கமணி (வயது 55). சம்பவத்தன்று இவர், அப்பட்டுவிளை பகுதியில் உள்ள வயலுக்கு வேலைக்காக சென்றார். மாலையில் வேலையை முடித்து விட்டு தங்கமணி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவருக்கு பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது, திடீரென தங்கமணியின் அருகில் வந்து முகவரி கேட்பது போல் பேச்சுக் கொடுத்தார்.

நகை பறிப்பு

அதை நம்பிய தங்கமணி முகவரியை கூறினார். அப்போது திடீரென அந்த வாலிபர் தங்கமணி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த தங்கமணி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர், சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றார்.

பின்னர், இதுகுறித்து தங்கமணி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story