அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு


அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 29 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற மே மாதம் 19–ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் கடந்த 22–ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி 250 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வாக்குச்சாவடி மையங்களில் மே 19–ந்தேதி தேர்தல் நாள் அன்று பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கு முதல் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் கடந்த 24–ந்தேதி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களால் நேற்று பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி முன்னிலையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்று நபர்கள் நியமிக்கப்படுவார்கள். 1,500–க்குமேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதனடிப்படையில் மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்களிலும் பணிபுரியவுள்ள 1,218 நபர்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டு அதனடிப்படையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி மையத்தில், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து படிப்படியாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்கள் ஆகியவற்றை எவ்வாறு கவனமாக கையாள வேண்டும் என்பது குறித்து விரிவான வீடியோவுடன் அனைவருக்கும் மண்டல அலுவலர்களால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல், அடையாள அட்டை உள்ளிட்டவை வைத்திருக்கிற போதிலும் வாக்கு செலுத்த அனுமதிக்க கூடாது. மேலும் வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏதும் ஏற்படின், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதோடு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு அளித்து அடுத்த கட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த பயிற்சியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story