வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி டிப்ளமோ என்ஜீனியரிடம் ரூ.4 லட்சம் மோசடி 2 பேருக்கு வலைவீச்சு
வள்ளியூர் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி டிப்ளமோ என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வள்ளியூர்,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசகாயம் தெருவை சேர்ந்தவர் நிர்மல்ராஜ் (வயது 28). டிப்ளமோ என்ஜினீயர். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் பீ்ட்டர். பீட்டரின் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளத்தை சேர்ந்த பெல்டன், மிக்கேல் லாரன்ஸ் பினோ ஆகியோர் நிர்மல்ராஜிக்கு அறிமுகம் ஆனார்கள்.
இந்த நிலையில் பெல்டன், மிக்கேல் லாரன்ஸ் பினோ ஆகிய 2 பேரும், நிர்மல்ராஜிடம் மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு நிறைய பணம் செலவாகும் என்றும் ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதனை நம்பிய நிர்மல்ராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தெற்குகள்ளிகுளத்தில் வைத்து பெல்டன் மற்றும் மிக்கேல் லாரன்ஸ் பினோ ஆகியோரிடம் ரூ.2 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. அதனை வாங்கிய பெல்டன் துபாய் சென்று விசா வாங்கி தருவதாக கூறிவிட்டு துபாய்க்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையே 3 மாதங்கள் ஆகியும் பெல்டன் விசா வாங்கி தராததால் நிர்மல்ராஜ் தெற்குகள்ளிகுளத்தில் இருந்த மிக்கேல் லாரன்ஸ் பினோவிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் இன்னும் சில நாட்களில் விசா தயார் ஆகிவிடும். எனவே மேலும் ரூ.2½ லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய நிர்மல்ராஜ், தனது டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கு மூலம் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்தை மிக்கேல் லாரன்ஸ் பினோவின் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். மீதி பணத்தை விசா கிடைத்தவுடன் தருவதாக கூறினார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. இதனால் நிர்மல்ராஜ் அவர் கள் 2 பேரையும் தொடர்பு கொண்டு கேட்டார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் நிர்மல்ராஜ், மிக்கேல் லாரன்ஸ் பினோவிடம் சென்று பணத்தை திருப்பி தந்துவிடுங்கள் என்று கேட்டார். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் காலம் கடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பெல்டன் ஊருக்கு வந்தார். இதனை அறிந்த நிர்மல்ராஜ் அவரிடம் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பெல்டனும், மிக்கேல் லாரன்ஸ் பினோவும் பணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறினர். மேலும் நிர்மல்ராஜை அவதூறாக பேசி அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து நிர்மல்ராஜ் வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெல்டன், மிக்கேல் லாரன்ஸ் பினோ ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story