கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சமாளிப்பது எப்படி? கலெக்டர் ஷில்பா அறிவுரை


கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சமாளிப்பது எப்படி? கலெக்டர் ஷில்பா அறிவுரை
x
தினத்தந்தி 28 April 2019 11:00 PM GMT (Updated: 28 April 2019 10:03 PM GMT)

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிக்க வேண்டும்? என்பது பற்றி நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

நெல்லை, 

இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் சராசரி வெப்ப அளவு வழக்கத்தை விட கூடுதலாக 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் கோடை வெப்பத்தில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பயணத்தின் போதும் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். வெளியில் செல்லும் போது முகம், கை, கால்கள் ஆகியவற்றை மறைக்கும் அளவுக்கு உடை அணிந்து செல்ல வேண்டும். தொப்பி, கண்ணாடி அணிந்து செல்லலாம். தலைவலி, தலைசுற்றல், கைநடுக்கம், பதற்றம் ஆகிய அடையாளங்கள் தென்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

வெளியில் செல்லும் போது பருத்தி துணியினால் ஆன இலகுவான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். குடைகளை எடுத்து கொண்டும், காலணி அணிந்து கொண்டு செல்வதும் அவசியம். வீட்டில் இருக்கும் போது இரவு நேரங்களில் ஜன்னல் கதவுகளை திறந்து காற்றோட்டமாக இருக்கும் படி செய்திட வேண்டும்.

மின்விசிறிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உடலில் வெப்பத்தினை குறைக்கும் வகையில் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். சர்க்கரை கரைத்த தண்ணீர், இளநீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை பருகினால் உடல் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ள முடியும். சூரிய வெளிச்சம் நேரடியாக படும் இடத்தில் வேலை செய்வதை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும்.

பணிபுரியும் இடத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் உரிய ஆலோசனை பெற்று நடந்திட வேண்டும். செல்ல பிராணிகளை நிழல் பாங்கான இடத்தில் கட்டி வைக்க வேண்டும். அவற்றுக்கு தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மேற்கொண்ட ஆலோசனைகளை பொதுமக்கள் கடைபிடித்து கோடை வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும்.

வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க கூடாது. பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது.

சமையல் செய்யும் போது கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணிக்காத ஆல்கஹால், தேனீர், கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் செல்லப்பிராணிகளை கட்டி போடக்கூடாது.

மேற்கண்ட நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி, வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப உணவுகளை உட்கொண்டு, தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டும் என்றால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இலவச தொலைபேசி எண்ணான 1077-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story