புதுக்கோட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் - 7 அமைச்சர்கள் பங்கேற்பு


புதுக்கோட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் - 7 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 April 2019 4:00 AM IST (Updated: 29 April 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 7 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கடம்பூர்ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை தாங்கினர். ஓட்டப்பிடாரம் சட்டசபை இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜிலா சத்யானந்த் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது, ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1¼ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கிய வாழ்க்கையை சிலர் சேராத இடத்தில் சேர்ந்து வாழாவெட்டியாக உள்ளார்கள். துரோகிகளின் கூடாரமாக அ.ம.மு.க. உள்ளது.

ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தவரை 257 வாக்குச்சாவடிகளில் 15 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து உள்ளோம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மற்றவர்கள் டெபாசிட் இழந்தார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

ஏழை மக்களின் ஆட்சி

அமைச்சர் காமராஜ் பேசும் போது கூறுகையில், ‘ஓட்டப்பிடாரம் அ.தி.மு.க.வின் கோட்டை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தலுக்கு பிறகு முதல்-அமைச்சர் ஆகிவிடுவதாக கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் கனவில் மட்டுமே முதல்-அமைச்சராக இருக்கலாமே தவிர, நிஜத்தில் முதல்-அமைச்சராக வரமுடியாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏழை, எளிய மக்களின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை யாரும் எதுவும் செய்ய முடியாது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்‘ என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தல் என்பது சர்க்கரைகட்டி, வெல்லக்கட்டி போன்றது. பலகளங்களை கண்டு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை பெற்று உள்ளோம். அதே போன்று வலுவான வெற்றியை இந்த இடைத்தேர்தலில் பெறுவோம். எதிர்க்கட்சியினரை விட இரண்டு மடங்கு பாய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகத்தில் அருள் இல்லை. அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் பொறுப்பு இல்லாமல் பேசுகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்துடன் உள்ளார். மு.க.ஸ்டாலின் டி.டி.வி.தினகரனுடன் கள்ளஉறவு வைத்து உள்ளார். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததாக 3 எம்.எல்.ஏ.க்கள் மீது விசாரணை நடக்கிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். இதன் மூலம் அவர்களுக்கு இடையே இருந்த ரகசிய உடன்பாடு வெளிப்பட்டு விட்டது. இவர்கள் தனித்தனியாக வந்தாலும், சேர்ந்து வந்தாலும் அவர்களை வீழ்த்த அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக உள்ளனர். ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. அலை வீசுகிறது. இதனால் மோகன் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாம் தமிழர் கட்சியை விட குறைவான ஓட்டுதான் தி.மு.க. பெறும் நிலை உள்ளது என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசும் போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசை காப்பாற்ற வேண்டும். துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல், எதிரிகளை ஓட, ஓட விரட்டக்கூடிய சரித்திரம் படைக்கும் தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் ராஜலட்சுமி பேசும் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து நிர்வாகிகளும் இணைந்து பணியாற்றி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வீரபாண்டி கோபி என்பவர் 250 பேருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

முன்னதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, சேவூர் ராமச்சந்திரன், ராஜலட்சுமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

Next Story