சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
சீரானமுறையில் குடிநீர் வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூர் ராஜீவ்காந்தி நகர் நடுக்காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர், மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதாக தெரிகிறது. இதனால் குழாய் மூலம் குடிநீர் பிடிக்கும் பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் அப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தென்கீரனூர் பஸ் நிறுத்தம் அருகே கள்ளக்குறிச்சி-மலைக்கோட்டாலம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் பகுதிக்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story