பணம், சொத்துகளை அபகரிக்க தாய், தங்கையை கொன்று எரித்தவர் கைது - 4 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியது


பணம், சொத்துகளை அபகரிக்க தாய், தங்கையை கொன்று எரித்தவர் கைது - 4 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியது
x
தினத்தந்தி 28 April 2019 10:45 PM GMT (Updated: 28 April 2019 11:15 PM GMT)

பணம், சொத்துகளை அபகரிப்பதற்காக தாய், தங்கையை கொன்று எரித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கி உள்ளது.

கோவை,

கோவை அவினாசி ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜா என்பவரின் மனைவி பாப்பாத்தி (வயது 67). இவருக்கு சரவணகுமார் (43) என்ற மகனும், கீதா (39) என்ற மகளும் இருந்தனர். சரவணகுமாருக்கும், கீதாவுக்கும் திருமணம் ஆகவில்லை. லாரியில் தண்ணீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இருதயராஜா பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இறப்பதற்கு முன்பு தனது மனைவி பாப்பாத்தி பெயரில் வங்கி கணக்கில் ரூ.32 லட்சம் இருப்பு தொகை வைத்து உள்ளார். மேலும் அவருக்கு அவினாசி ரோட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து இருந்தது. அந்த இருப்பு தொகையின் வட்டி பணத்தை பாப்பாத்தியும், கீதாவும் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது சரவணக்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தாயையும், தங்கையையும் தீர்த்துக்கட்டிவிட்டு பணத்தையும், சொத்தையும் அபகரிக்க வேண்டும் என்று எண்ணினார். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பாப்பாத்தி மற்றும் கீதாவை தாக்கி கொன்றார். பின்னர் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வரை 2 பேரின் பிணங்களை வீட்டிலேயே வைத்து, அவரும் வசித்து வந்தார். நாளுக்கு நாள் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவர் உடல்களை மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்தார்.

பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சரவணக்குமார் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பழைய கோட்டையில் உள்ள தனது மாமா வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார். அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சரவணக்குமாரை கைது செய்தனர்.

சரவணக்குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக கோவில்களில் பிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து சரவணக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கி உள்ளது.

Next Story