தெரிந்து கொள்வோமே...


தெரிந்து கொள்வோமே...
x
தினத்தந்தி 29 April 2019 9:42 AM IST (Updated: 29 April 2019 9:42 AM IST)
t-max-icont-min-icon

மூளைத்திறனை மேம்படுத்தும் பயிற்சிகள்

மூளையின் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு நுட்பங்கள் உள்ளன. இதனை முறையாக வழக்கமான முறையில் செயல் படுத்தினால் அறிவுத்திறனை முன்னேறச் செய்யலாம்.

‘மூளைத்திறன் குறையாமல் இருக்கவும், மேம்படவும் வாழ்நாள் முழுவதும் எதையாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இத்தகைய கற்கும் பயிற்சி மூலம் நமது ஞாபகசக்தி அதிகரிக்கும். மேலும் தினமும் உடற்பயிற்சிகள் செய்தால், மூளையில் புதிய செல்கள் உருவாகும். இதனால் அறிவுத்திறன் மேம்படும், மூளை நரம்பியல் மண்டலத்தில் உள்ள ‘நியூரான்கள்’ ஆரோக்கியமாக இருக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூளையிலுள்ள முக்கியமான பகுதி ‘ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus). தமிழில் இதை ‘மூளை பின்புற மேடு’ என்பார்கள். இதுதான் நமது ஞாபகசக்தி மற்றும் கற்கும் திறனை மேம்படுத்தும் பகுதியாகும்.

நாம் எப்போது கற்பதை நிறுத்த ஆரம்பிக்கின்றோமோ, அப்போது மூளையின் இந்தப் பகுதிகள் சுருங்க ஆரம்பித்துவிடுகின்றன.

நமது மூளையின் இடதுபுறம் உள்ள பகுதி ‘டெம்பரல் லோப்’ (Temporal Lobe). இதை ‘தற்காலிக மண்டலம்’ என்பார்கள். இந்தப் பகுதிதான், வாக்கு சாதுர்யம், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. இதன் திறனை மேம்படுத்த இசைப்பயிற்சி உதவுகிறது என்று கண்டுள்ளனர். இதனால் தான் இசைத்துறையைச் சார்ந்தவர்கள் சிறந்த ஞாபகசக்தி கொண்டுள்ளனர்.

சில பயிற்சிகளாலும் மூளையின் செயல் பாடுகளை தூண்டலாம். அத்தகைய பயிற்சிகளில் ஒன்று ‘நிமானிக்’ (Mnemonic). இந்த நினைவூட்டும் பயிற்சி மூளையில் தகவல்களை பதிவு செய்யவும் (encode), பதிவு செய்துள்ள தகவல்களை மீட்டு எடுக்கவும் (retrieve) உதவுகிறது. மிகக்கடினமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள இந்த பயிற்சி உதவுகிறது.

நாம் படித்தது, கேட்டது போன்றவற்றை மறந்துபோகாமல் ஞாபகத்தில் வைக்க எளியமுறையில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் படங்கள், வாக்கியங்கள் மற்றும் சில சாதாரண வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோல இன்னொரு பயிற்சி ‘அக்ராஸ்டிக்’ (Acrostic). அகரவரிசைப்படுத்தும் முறையில் எழுத்துக்களின் வரிசைகள் நினைவில் வைத்துக்கொண்டு ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் முறைப்படுத்தப்படுகின்றன.

அடுத்தது, ‘மைண்ட் பேலஸ் மெமரி’ (Mind Palace Memory) என்ற பயிற்சி. தமிழில், ‘அரண்மனை நினைவகப்பயிற்சி’ எனப்படும் இது மிகவும் சக்தி வாய்ந்த பயிற்சி ஆகும். இதில் மூளையின் செயல்திறனை, வார்த்தைகள் மற்றும் படங்களைக் கொண்டு இணைப்பு ஏற்படுத்தி, நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்வதாகும். இப்பயிற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேற்று மொழி வார்த்தை களையும் சொற்றொடர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

மூளைக்கு சில புதிய அனுபவ ஆற்றல் களைக் கொடுப்பதினாலும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். ‘நியூரோபிக் காக்னடிவ் டிரைய்னிங்’ (Neurobics Cognitive Training) என்னும் நரம்பியல் அறிவாற்றல் பயிற்சியில் மூளையைப் பயன்படுத்தி செய்யும் பயிற்சி முறைகள் உள்ளன. இதில் நமது உடல் மற்றும் உணர்வுகள் மூலம் மூளையின் பயன்பாடு மேம்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, வலதுகைப் பழக்கம் உள்ளவர் தனது இடதுகையால் செயல்களைச்செய்யப் பழகவேண்டும். இதனால் மூளையின் பல பகுதிகள் இணைந்து தூண்டப்படும். இது நமது நரம்பணுக்களை வலிமையாக்கி அவை வயதாகாமல் இருக்க எதிர்ப்புசக்தியைத் தரும்.

புதிர்கள், குறுக்கெழுத்துப்போட்டி, வரிசைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மூளையின் திறனை அதிகரிக்கும். மூளைசார்ந்த விளையாட்டுகள் மூலம் மூளையின் நிர்வாக செயல்பாடு, வேலை நினைவாற்றல், செயலாற்றும் வேகம் போன்றவை அதிகரிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், லேசான அறிவாற்றால் முரண்பாடு (Mild Cognitive Impairmrnt) உள்ளவர்களின் ஞாபகசக்தி அதிகரிப்பதாகவும், மனச்சோர்வினால் ஏற்படும் நோய்களும் குணமாகின்றன. மூளைக்கு அளிக்கப்படும் இதுபோன்ற முறைப்படுத்தப்பட்ட தூண்டுதல் பயிற்சியால் மனச்சோர்வு நோய் பாதிப்பில் இருந்து மீளமுடியும்.

ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் மூலமும் மூளையின் ஆரோக்கியம் பலப்படுத்தப்படும். மூளையின் எடையில் 8 சதவீதம் ஒமேகா கொழுப்பு அமிலம் இருப்பதாகவும், இந்த கொழுப்பு அமிலம் மூளையின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் பாதுகாப்பதில் திறன் வாய்ந்ததாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கணினிகள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்கள் நம்முடைய பல வேலைகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டன. இவை நமது மூளையின் செயல்பாடுகளை குறைத்து மனிதனை சோம்பேறி ஆக்கிவிட்டன.

எனவே, நமது மூளைக்கு சவால் விடும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கணிதம் சார்ந்த மற்றும் மதிப்பீடு தரக்கூடிய பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வரவேண்டும். எந்த நிலையிலும் உடலையும், மூளையையும் சோம்பேறி ஆக்கிவிடக்கூடாது. இதுபோன்ற பயிற்சிகள் மூலம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

- முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.


Next Story