முதல் ஆட்சேர்க்கை முகாம் அறிவிப்பு


முதல் ஆட்சேர்க்கை முகாம் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 April 2019 10:02 AM IST (Updated: 29 April 2019 10:02 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரர் பிரிவில் பெண்கள் சேர்ப்பு முதல் ஆட்சேர்க்கை முகாம் அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் முதல்முறையாக ராணுவ வீரர் பிரிவில் பெண்களை சேர்க்கும் ஆட்சேர்க்கை முகாம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில், இதுவரை அதிகாரி தரத்திலான பொறுப்புகளில் மட்டுமே பெண்கள் பதவி வகித்து வருகிறார்கள். துப்பாக்கி ஏந்தி போர்க்களம் செல்லும் படைவீரர் பிரிவில் பெண்கள் இதுவரை சேர்க்கப்படவில்லை. இந்திய ராணுவத்தில் மொத்தம் 14 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இவற்றில் அதிகாரி தரத்திலான 65 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இவர்களில் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் சேர்த்து சுமார் 4 ஆயிரத்திற்கும் குறைவான பெண்களே பணியாற்றுகிறார்கள். இதில் தரைப்படையில் 1500 பேரும், விமானப்படையில் 1600 பேரும், கடற்படையில் 500 பேரும் பணியாற்றுகிறார்கள்.

இந்த நிலையில் குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே பணியமர்த்தப்பட்ட பெண்களை, ராணுவ வீரர் பிரிவிலும் களமிறக்கும் புதிய முடிவை மத்திய அரசு எடுத்தது. ராணுவ காவல்துறை பிரிவில் பெண்களை சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில மாதங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த பிரிவில் மொத்தம் உள்ள இடங்களில் 20% பெண்களை சேர்க்க அறிவிப்பு வெளியானது. தற்போது இதற்கான ஆட்சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக ராணுவத்தில், காவல்துறை பிரிவில் 800 பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது தவிர ஆண்டுதோறும் 50 உதவிப் பணியாளர்களை நியமிக்கவும் உள்ளனர்.

இதையடுத்து, பெண்களுக்கான ஆட்சேர்க்கை முகாம் வருகிற ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக அம்பாலா, லக்னோ, ஜபல்பூர், பெங்களூரு மற்றும் ஷில்லாங் போன்ற பகுதிகளில் பெண் படைவீரர் சேர்க்கை நடைபெற உள்ளது. மொத்தம் 100 பேர் சேர்க்கப்பட உள்ளனர். விரைவில் இதுபோன்ற ஆட்சேர்க்கை முகாம்கள் தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளுக்காக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் ராணுவ வீரர் பிரிவில் நீங்கள் சேர விரும்புகிறீர்களா? நீங்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு படிப்பை 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த பாடத்திலும் 33 சதவீதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றிருக்கக்கூடாது. 17½ வயது முதல் 21 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 142 செ.மீ. உயரம் பெற்றிருக்க வேண்டும், உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப்படும்.

உடல் அளவுத் தேர்வு, உடல் உறுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் ராணுவ பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட காலம் கடுமையான ராணுவ பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்களே ராணுவ வீராங்கனையாக பணி பெற முடியும். இவை பற்றிய விவரங்கள் www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியாகும். உங்கள் பகுதிக்கான ஆட்சேர்க்கை அறிவிக்கப் படும்போது, தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறையை அறிந்து கொண்டு விண்ணப்பித்து, நீங்களும் நாட்டிற்காக ராணுவ சேவையாற்றலாம்.


Next Story