வி.ஐ.டி. பி.டெக். நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: முதல் 3 இடங்களை வெளி மாநிலத்தினர் பிடித்தனர் 9-ந் தேதி கவுன்சிலிங் தொடக்கம்
வி.ஐ.டி.யில் பி.டெக். படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் முதல் 3 இடங்களை வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிடித்தனர். வருகிற 9-ந் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது.
வேலூர்,
வி.ஐ.டி. வேலூர், சென்னை, அமராவதி மற்றும் போபால் வளாகங்களில் பி.டெக். பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த 10-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை துபாய், குவைத், மஸ்கட், கத்தார் ஆகிய வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட 163 மையங்களில் கணினி முறையில் தினமும் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 462 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்,
நுழைவுத் தேர்வு முடிவுகள் www.vit.ac.in, என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி சாய் சகிடிக்கா செருக்குரி முதலிடத்தையும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் குரஜாலா ஜோயல் மோசஸ் இரண்டாவது இடத்தையும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த துஸார் ஜெயின் மூன்றாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு பி.டெக். பட்டப்படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் ரேங்க் அடிப்படையில் அடுத்த மாதம் (மே) 9-ந் தேதி முதல் நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வில் 1 முதல் 10000 வரை ரேங்க் பெற்றவர்களுக்க்கு வருகிற 9-ந் தேதியும், 10001 முதல் 30000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 10-ந் தேதியும், 30001 முதல் 50000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 11-ந் தேதியும், 50001 முதல் 70000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 13-ந் தேதியும், 70001 முதல் 90000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 14-ந் தேதியும், 90001 முதல் 110000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 15-ந் தேதியும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. தகுதிபெற்ற மாணவ-மாணவிகள் வி.ஐ.டி. வேலூர், சென்னை, அமராவதி மற்றும் போபால் வளாகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
இந்த தகவல்கள் வி.ஐ.டி. வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story