எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: தர்மபுரி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: தர்மபுரி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
x
தினத்தந்தி 30 April 2019 3:45 AM IST (Updated: 29 April 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளன.

தர்மபுரி, 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் 213 அரசு பள்ளிகள் உள்பட 322 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 626 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். இவர்களில் 20 ஆயிரத்து 760 பேர் தேர்ச்சி பெற்றனர். அதியமான்கோட்டை, பண்டஅள்ளி, மானியதஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிகள், இலக்கியம்பட்டி மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப்பள்ளி பாலஜங்கமனஅள்ளி, இலக்கியம்பட்டி, காரியப்பனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 78 அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 63 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டம் முழு வதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 141 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 74 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று இருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக 4 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story