சூளகிரி அருகே பெண் கொலை: கர்நாடகாவில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
சூளகிரி அருகே பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடகாவில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மேலுமலையில் இருந்து பாலகுன்றாயன துர்க்கம் செல்லும் வழியில், வனத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் போதை குட்டை என்ற இடத்தில் பாறை இடுக்கில் தேங்கிய தண்ணீரில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 20-ந் தேதி பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொலையுண்டு கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது கையில் பிரேம் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இறந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக துப்பு துலங்குவதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தனிப்படை அமைத்துள்ளார். அதில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மற்றும் சூளகிரி போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கொலையான பெண் பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக கொலையான பெண்ணின் புகைப்படத்துடன் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் துண்டுபிரசுரங்களை போலீசார் அச்சடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் மாநில எல்லையில் உள்ள கர்நாடகா, ஆந்திர மாநில பகுதிகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் கூடும் இடங்களில் இந்த துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டு அங்குள்ள போலீஸ் நிலையங்களில் சமீபத்தில் பெண்கள் யாரேனும் காணாமல் போனதாக வழக்கு பதிவாகி உள்ளதா? என்றும், அவ்வாறு காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது பெண் கொலை தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். முதல் கட்டமாக கொலையுண்ட பெண் யார்? என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story