நன்னிலம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி மகன் கண் முன்னே பரிதாபம்


நன்னிலம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி மகன் கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 30 April 2019 3:45 AM IST (Updated: 30 April 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். மகன் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே புத்தகளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 48). இவரும், இவருடைய மகன் ஹரிகரனும்(20) மோட்டார் சைக்கிளில் புத்தகளூரில் இருந்து நன்னிலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ஹரிகரன் ஓட்டி சென்றார்.

அப்போது அச்சுதமங்கலம் சட்ரஸ் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து மஞ்சுளா தவறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஹரிகரன் நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மேலபாலையூரை சேர்ந்த சரவணன்(43) என்பவரை கைது செய்தனர்.

மேலும் மஞ்சுளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மகன் கண்முன்னே பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அச்சுதமங்கலம் சட்ரஸ் அருகில் உள்ள வளைவு மிகவும் ஆபத்தான வளைவு ஆகும். இந்த வளைவில் கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பஸ்கள் கவிழ்ந்துள்ளன. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் இன்று வரையில் வேகத்தடை அமைக்காததுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 

Next Story