இளம்பெண் தீக்குளிப்பு: கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை


இளம்பெண் தீக்குளிப்பு: கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 April 2019 4:30 AM IST (Updated: 30 April 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தீக்குளிக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் தாய் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சேலம், 

சேலம் தாதம்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி இந்திராணி (வயது 48). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் கலைச்செல்வி (23). இவருக்கும், கன்னங்குறிச்சியை சேர்ந்த வேன் டிரைவர் ஜீவா (28) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் கலைச்செல்வி நேற்று முன்தினம் இரவு தனது உடலில் தீ கொழுந்து விட்டு எரிந்தபடி வீட்டில் இருந்து கதறிக்கொண்டு வெளியில் ஓடி வந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அவரது உடல் முழுவதும் தீயில் கருகியது. பின்னர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மகளின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கலைச்செல்வியின் தாய் இந்திராணி மற்றும் உறவினர்கள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை, அங்கு வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் போட்டனர். இது குறித்து இந்திராணி பரபரப்பான புகார் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமணம் முடிந்ததில் இருந்து எனது மகளை, அவரது கணவர் ஜீவா அடித்து கொடுமைப்படுத்தினார். இதையொட்டி கன்னங்குறிச்சி போலீசில் நாங்கள் புகார் அளித்தோம். அதன்பேரில் போலீசார் கணவன், மனைவி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்து அனுப்பினர். சில நாட்களுக்கு பிறகு ஜீவாவின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு எனது மகளை மீண்டும் துன்புறுத்த தொடங்கினர்.

இதையொட்டி 5 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை நான் கொடுத்தேன். ஆனால் கலைச்செல்வியை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் எனது மகள் தீக்குளித்து விட்டதாகவும், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து இருப்பதாகவும், ஜீவா எங்களுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் வந்து பார்த்த போது எனது மகள் உடல் முழுவதும் வெந்து போய் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தாள். எனவே எனது மகளின் இந்த நிலைமைக்கு காரணமான அவளது கணவர் ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அங்கு பாதுகாப்பிற்கு இருந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையொட்டி அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story