பாலன்நகர் பகுதியில் மயானத்திற்கு இடம்; அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டக்கோரி பொதுமக்கள் மனு


பாலன்நகர் பகுதியில் மயானத்திற்கு இடம்; அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 8:29 PM GMT)

பாலன்நகர் பகுதியில் மயானம் இடத்தை ஒதுக்கீடு செய்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனு போட்டனர்.

புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் கடந்த 18-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் பதிவான வாக்குகள் வருகிற மே மாதம் 23-ந் தேதி எண்ணப்பட உள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாததால், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள மனுக்கள் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.

சமுதாய கூடம் கட்டுவதற்கு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள மனுக்கள் பெட்டியில் புதுக்கோட்டை அருகே உள்ள 9 ஏநத்தம் பண்ணை ஊராட்சி பாலன்நகர், ராஜவயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போட்ட மனுவில், பாலன்நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பாலன்நகரில் இருந்து ராஜாவயல் செல்லும் சாலையில் பாலன்நகர் பகுதியை சேர்ந்த இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனித்தனியே 3 மயானம் உள்ளன. மேலும் அந்த பகுதியில் ராஜாவயல் பகுதியில் உள்ள மக்களுக்கும் சுடுகாடு உள்ளது.

பாலன்நகர் பகுதி முழுவதும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் உள்ளது. தற்போது மயானம் உள்ள பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்து உள்ளது. இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்காக மற்றும் ராஜவயல் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானம் இடத்தை ஒதுக்கீடு செய்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும். மேலும் பாலன்நகர் கே.ஆர்.எஸ்.வீதியில் உள்ள பிள்ளையார்கோவிலுக்கு அருகே உள்ள இடத்தை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் சமுதாய கூடம் கட்டுவதற்கு விலையில்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுடுகாடு பகுதிகளுக்கு சாலை அமைத்தும், சுற்றுவேலி அமைத்தும் கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். 

Next Story