மதிப்பெண் குறைந்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


மதிப்பெண் குறைந்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 April 2019 4:45 AM IST (Updated: 30 April 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

மதிப்பெண் குறைந்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நல்லகுமார். இவருடைய மகன் அபிராம் (வயது 15). நல்லகுமாரின் மனைவி இறந்து விட்டார். இதனால் அவர் தனது மகனை சேலம் மாவட்டம் தாதுபாய் சி.சி.ரோடு பகுதியில் வசித்து வந்த அவனது பாட்டி வீட்டில் விட்டிருந்தார்.

அங்கிருந்தபடி அபிராம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து அபிராம் விடுமுறைக்காக ஈரோட்டிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் அபிராம் தேர்வு முடிவுகளை பார்த்தார். அப்போது அவர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 500-க்கு 332 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.

மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் அவர் தனது தந்தையிடம் கூறி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். அதனால் நல்லகுமார் தனது மகனை சமாதானப்படுத்தி உள்ளார்.

அதைத்தொடர்ந்து நல்லகுமார் வெளியில் சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த அபிராம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அபிராமை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அபிராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story