ஒதுக்கீடு பொருட்களை வழங்கும் நாட்களை அதிகரிக்க வேண்டும் முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை
ஒதுக்கீட்டில் வழங்கப்படும் பொருட்கள் வழங்கும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி,
காரைக்குடி பல்கலைக்கழக சாலையில் தமிழ்நாடு தேசிய மாணவர் படை 9–வது பட்டாலியனின் தலைமையகம் உள்ளது. இங்குள்ள ஒரு பிரிவில் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கான பொருட்கள் சலுகை விலையில் அரசால் வழங்கப்படுகிறது. இதற்கான பொருட்கள் திருச்சியில் இருந்து வாங்கி வரப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரத்து 800 பேர்களுக்கு தேவையான குடும்ப பொருட்கள் மாதத்தின் கடைசி இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் வழங்கப்படுகிறது.
இந்த பொருட்களை வாங்குவதற்கு கடுமையான போட்டியும், அதிகமான கூட்டம் உள்ளது. குறிப்பாக பொருட்கள் வாங்க முதல் நாள் இரவே வரிசையில் இடம் பிடிப்பதற்காக பையை போட்டு காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் சிலர் இரவு முழுவதும் அங்கேயே தங்கி மறுநாள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனராம். இந்தநிலையில் நேற்று பொருட்கள் வாங்கும் தினம் என்பதால், அதை வாங்க முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து முன்னாள் ராணுவத்தினர் கூறுகையில், சலுகை விலையில் வழங்கப்படும் பொருட்களை வாங்க வரும் எங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக நடத்துவதால், அது எங்களுக்கு அவமானமாக உள்ளது. எங்களுக்கான பொருட்களின் ஒதுக்கீடுகளை அந்தந்த மாதமே வாங்க வேண்டும். அதை அடுத்த மாதம் சேர்த்து வாங்க முடியாது. பல மாதங்களாக நாங்கள் பொருட்களை வாங்க முடியாமல் போகிறது. இதனால் எங்களுக்கான ஒதுக்கீடு பொருட்கள் என்ன ஆகிறது என்பது தெரியவில்லை.
மேலும் எங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு பொருட்களை வாங்குவதற்கு வசதியாக, பொருட்கள் வழங்கும் நாட்களின் எண்ணிக்கையையும், நேரத்தையும் அதிகரிக்க வேண்டும். எங்களை கவுரவப்படுத்தும் வகையில் அரசு செய்து தரும் ஒதுக்கீடு பொருட்களை நாங்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.