ரெகுநாதபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் எரிவாயு குழாய்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


ரெகுநாதபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் எரிவாயு குழாய்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 April 2019 4:00 AM IST (Updated: 30 April 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

ரெகுநாதபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் எரிவாயு குழாய்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தை அடுத்துள்ள ரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், குருசாமி மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் தலைமையில் பொதுமக்கள் ராமநாதபுரத்தில் கலெக்டர் வீரராகவராவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– ரெகுநாதபுரம் பகுதியில் நெல் மற்றும் மானாவாரி பயிர்கள் தென்னை விவசாயம் அதிகஅளவில் உள்ளது. வழுதூரில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ரெகுநாதபுரத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படுகிறது.

இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் வழியாக குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக பெரிய பைப்லைன் அமைக்கப்படுதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு எரிவாயு எடுக்கும்போது ஏற்படும் இரைச்சல் சத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது தனியார் பட்டா நிலத்தில் மேலும் 9 ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இந்த பகுதி கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால் முற்றிலும் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் எண்ணெய், எரிவாயு குழாய்கள் அமைக்கக் கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதற்கு முரணாக ரெகுநாதபுரம் பகுதியில் ஆழ்துளை கிணறுகள், எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 400 ஏக்கர் விவசாய நிலங்களும், 10 ஏக்கர் தென்னந்தோப்புகளும், 15 ஏக்கர் மானாவாரி பயிர்களும் புதிதாக அமைக்கப்பட உள்ள ஆழ்துளை கிணறுகளால் முற்றிலும் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை இப்பகுதியில் இருந்து வெளியேற்றி ஆழ்துளை கிணறுகள்,எரிவாயு குழாய்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story