ராஜபாளையம் அருகே வங்கி ஊழியர் அடித்துக்கொலை; 2 வாலிபர்கள் கைது
ராஜபாளையம் அருகே வங்கி ஊழியரை அடித்துக்கொலை செய்ததாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தளவாய்புரம்,
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லங்கொண்டான் நக்கனேரி சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் மிதந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சேத்தூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் ராஜபாளையம் அருகே நக்கனேரி காலனி தெருவை சேர்ந்த காந்தி மகன் இசக்கி(வயது 34) என்பதும், இவர் தனியார் வங்கியில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும் இறந்த இசக்கியின் முகம், தலையில் காயம் இருந்தது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் நக்கனேரியை சேர்ந்த பாலமுருகன்(24), முனீஸ்வரன்(22) ஆகிய இருவரும் இசக்கி நகைக்கடன் பெற்று தந்ததில் கமிஷன் தொடர்பாக கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் இசக்கியை அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது பிணத்தை கிணற்றில் வீசியுள்ளனர். இதைதொடர்ந்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.