பல தலைமுறைகளாக வசிக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு கிராம மக்கள் மனு


பல தலைமுறைகளாக வசிக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 29 April 2019 10:33 PM GMT (Updated: 29 April 2019 10:33 PM GMT)

பல தலைமுறைகளாக வசிக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

திண்டுக்கல்,

கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு அருகே உள்ள வாழகிரி கிராமத்தை சேர்ந்த மக்கள் மனு கொடுப்பதற்காக நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை.

பின்னர் அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர். ஆனால் அந்த மனுவை அதிகாரிகள் வாங்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த குறைதீர்க்கும் பெட்டியில் மனுவை போட்டனர். பின்னர் இந்த மனு குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

காடுகளில் மூலிகை, கிழங்கு, தேன், நெல்லிக்காய் எடுப்பது எங்கள் தொழில். எங்கள் குலதெய்வமான பளிச்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள காலி இடத்தில் பல தலைமுறைகளாக சுமார் 31 குடும்பங்களை சேர்ந்த நாங்கள் குடிசை அமைத்து வசித்து வருகிறோம். இந்த இடத்துக்கு பட்டா வழங்குவதற்காக அதிகாரிகள் வந்து நிலத்தை அளவீடு செய்து சென்றனர்.

இந்தநிலையில் அந்த இடத்தை காலி செய்யுமாறு சிலர் எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே நாங்கள் வசிக்கும் இடத்துக்கு அரசு பட்டா வழங்குமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தனர். அந்த மனு குறித்து அவர் கள் கூறிகையில், எங்கள் பகுதியான செங்குறிச்சியை சுற்றி ஆலாம்பட்டி, புதுப்பட்டி, சடையம்பட்டி, பிச்சம்பட்டி, கருப்பகோவில்பட்டி, பாண்டியனூர் ஆகிய 6 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் புதுப்பட்டி நால்ரோடு பகுதியில் மதுக்கடை திறக்கப்பட உள்ளது. எனவே மதுக்கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 

Next Story