இன்று நடைபெற இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் திடீர் ரத்து


இன்று நடைபெற இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் திடீர் ரத்து
x
தினத்தந்தி 30 April 2019 4:22 AM IST (Updated: 30 April 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதாவது சித்தராமையா எச்சரிக்கையால் எஸ்.டி.சோமசேகர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்தார். ஆனால் மந்திரி பதவி கிடைக்காததால், அவர் கடும் அதிருப்தி அடைந்தார். அவரை சரிக்கட்டும் பொருட்டு, அவருக்கு முக்கிய வாரியங்களில் ஒன்றான பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த வாரியம் தங்கள் கட்சிக்கு வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கேட்டார். ஆனால் காங்கிரஸ் அதை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டது.

இந்த நிலையில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் பதவி எஸ்.டி.சோமசேகருக்கு வழங்கப்பட்டாலும், அந்த ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் நோக்கத்தில், பெங்களூரு வளர்ச்சி ஆணைய சிறப்பு அதிகாரியாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை குமாரசாமி நியமித்தார்.

இதன் மூலம் பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.டி.சோமசேகரின் அதிகாரம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆணையத்தில் தனது பேச்சுக்கு மரியாதை இல்லை என்று எஸ்.டி.சோமசேகர் காங்கிரஸ் தலைவர்களிடம் புகார் கூறினார். ஆனாலும் இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், “கர்நாடகத்தில் அரசியல் நிலைமை மிக மோசமான நிலையில் உள்ளது. இதை சரிசெய்யும் நோக்கத்தில் 30-ந் தேதி (அதாவது இன்று) ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே கருத்துடைய (அதிருப்தி) எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

எஸ்.டி.சோமசேகரின் இந்த கூட்டம் குறித்த தகவல், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணி ஆட்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தகவல் வெளியானது. எஸ்.டி.சோமசேகர் சித்தராமையாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்தராமையா எஸ்.டி.சோமசேகரை தொடர்பு கொண்டு, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டத்தை கூட்டி இருப்பது சரியல்ல. அதனால் இந்த கூட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை எஸ்.டி.சோமசேகர் ரத்து செய்துள்ளார்.

Next Story